Showing posts with label லஞ்சம். Show all posts
Showing posts with label லஞ்சம். Show all posts

Friday, July 3, 2009

லஞ்சத்தை தடுக்க இப்பிடி ஒரு வழி !!





நேபாள நாட்டு விமான நிலையத்தில் ஊழியர்கள் சரமாரியாக லஞ்சம் வாங்குவதைத்
தடுக்க ஊழியர்களுக்கு பாக்கெட்களே இல்லாத பேன்ட்களை கொடுக்க அந்த நாட்டு ஊழல் ஒழிப்பு
வாரியம் திட்டமிட்டுள்ளதாம்.

நேபாள நாட்டில் ஒரே ஒரு விமான நிலையம்தான் உள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் உள்ள
திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஊழியர்கள், பயணிகளிடம் பெருமளவில் லஞ்சம்
வாங்குவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இதை ஒழிக்க தற்போது வித்தியாசமான ஐடியாவை உருவாக்கியுள்ளது நேபாள லஞ்ச ஒழிப்பு வாரியம்.

இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஐஸ்வரி பிரசாத் பெளத்யால் கூறுகையில்,
பெருமளவில் புகார்கள் வந்ததால் கண்காணிப்புக் குழுவை விமான நிலையத்திற்கு அனுப்பினோம்.
அதில் லஞ்சம் வாங்குவது உண்மை என்று தெரிய வந்தது.

இதையடுத்து விமான நிலைய ஊழியர்களுக்கு பாக்கெட்டே இல்லாத பேன்ட்களைக் கொடுக்க முடிவு
செய்துள்ளோம். இதுதொடர்பாக விமானப் போக்குவரத்துத் துறைக்கு பரிந்துரையை
அனுப்பியுள்ளோம். விரைவில் இது நடைமுறைக்கு வரும்.

இதன் மூலம் ஓரளவு லஞ்சம் குறையும் என நம்புகிறோம். இதற்கும் ஊழியர்கள் கட்டுப்படாவிட்டால்
அவர்களை வேலையிலிருந்து நீக்குவது ஒன்றுதான் வழி என்றார்.

நேபாள நாட்டின் முக்கியத் தொழிலே சுற்றுலாதான். இங்கு 3 லட்சம் பேர் சுற்றுலாவை நம்பி
உள்ளனர்.

கடந்த ஆண்டு நேபாளத்திற்கு 4.50 லட்சம் பேர் சுற்றுலா வந்தனர். இந்த ஆண்டு 10 லட்சம் பேரை
ஈர்க்க நேபாளம் திட்டமிட்டுள்ளது. ஆனால் விமான நிலையத்தில் நிலவும் இந்த லஞ்சப் பேயால்
பயணிகள் பெருமளவில் அதிருப்திக்குள்ளாவதாக புகார்கள் குவிந்ததைத் தொடர்ந்து அவர்களது
பாக்கெட்டில் கை வைத்துள்ளது அரசு.